Wednesday 8 April 2015

அஞ்சலி-நாகூர் ஹனிபா

  நாகூர் ஹனிபாவின் குரல் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. இசைப் பண்டிதருடையதா அல்லது பாமரருடையதா என குழம்ப வைக்கும். பண்டிதரையும், பாமரரையும் மயங்க வைக்கும். அவரின் குரல் தமிழில் பாடும் வேறு எந்த பாடகர்களுக்கும் இல்லை. அதுவும் இஸ்லாமிய சமய பாடல்களை பாடும் போது அந்தக் குரலில் ஒரு பணிவு இருப்பதை அறியலாம். அவர் தி.மு.க கழக பாடல்களைப் பாடியதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை. அதிலும், “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே” என அவர் படியதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஏனென்றால், இஸ்லாமியர்கள் இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை, ஆனால், நல்ல நல்ல இஸ்லாமிய இறைப் பாடல்கள் பாடிய ஹனிபா, ஏனோ இவ்வாறு சில மனிதர்களைப் பற்றிய சுயபுராண பாடல்களையும் பாடிவிட்டார். 

     இவ்வளவுத் தனித்தன்மையான குரலைத் தமிழ்த் திரையுலகம் துளியும் பயன்படுத்திக்கொள்ளவில்லை, என்பதும் உண்மை. இது நாகூர் ஹனிபாவிற்கு நன்மையே செய்திருக்கும் என நான் உறுதியாய் நம்புகிறேன்( பணம் தவிர) கலைக்காக இல்லாமல், காசுக்காக ஆடும் கூத்தாடிகளின் நட்பு யாருக்கும் நிச்சயம் நன்மையைத் தராது.

   சில பாடல்கள் நம்மை எங்கோ தூக்கி செல்லும். நாகூர் ஹனிபாவின் குரலும் அப்படித்தான், அவரின் பாடல்களைக் கேட்கும் போது நான் அரேபியாவில் இருப்பது போல் உணர்கிறேன். இப்பொது, பெட்ரோல் விற்றுக் கொழுப்பேறிய, மூளை மழுங்கிய அரேபியா இல்லை. 300 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களாய்,இஸ்லாமியராய் அரேபியர்கள் வாழ்ந்திருப்பார்களே அங்கு.

     இப்பொதெல்லாம் சில போலி முஸ்லிம்கள், மதத்தைக் காப்பாற்றுவதாகக் கூறி நடுத்தெருவில் மேடைப் போட்டு கிறுக்குத்தனமாக உளறுவதை நீங்கள் நிறைய இடங்களில் காணலாம். ஆனால், மற்ற மதத்தினரை புண் படுத்தாமல், நான் மதத்தைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லாமல், ஹனிபா இஸ்லாமியரை அவர் பாடல்கள் மூலம் நல்வழிப்படுத்தியுள்ளார் என்றால் மிகையாகாது. 

    அவருடைய, சமயப் பாடல்களைக் கேட்கும் போது இது இஸ்லாமியருக்கான் பாட்டு, இந்துக்களுக்குக் கிடையாது என்றெல்லாம் தோன்றாது. ” பள்ளி செல்ல மனமில்லையோ” என அவர் தொழுகைக்கு செல்லாதா முஸ்லிம்களை நோக்கிப் பாடும் பாட்டை, இந்துக்கள் உருகி,உருகி பாடுவதை நான் பார்த்திருக்கிறேன்.

     ”இறைவனிடம் கையேந்துங்கள்”  பாடலை இஸ்லாமியர்கள் பாடியதை விட, இந்துக்கள் பாடித்தான் நான் அதிகம் பார்த்திருக்கிறேன். இந்தப் பாடல் ஒரு முஸ்லிம், முஸ்லிம்களுக்காக பாடியது என்று அறிந்தும் கூட இந்துக்கள் பாடுகிறார்கள். இனிமேலும் பாடுவார்கள்.  நாகூர் ஹனிபாவின் சமயப் பாடல்களுக்கு இந்து சமய ரசிகர்கள் அதிகம் என்பதி யாரும் மறுக்க முடியாது. தொலைக்காட்சிகளில் அவர் பாடுவதைப் பார்த்தால், அது இஸ்லாமிய சமயப் பாடலாக இருந்தாலும் சரி  அதை ரசிக்கும் இந்துக்கள் மிக அதிகம்.

    இந்தியாவில் இயல்பாகவே இந்துக்களுக்கும், இஸ்லாமியருக்கும் இருக்கும் சகோதரத்தன்மையை,  நாகூர் ஹனிபா தன் குரலால் இறுக்கிப் பிணைத்துள்ளார் என்பது உண்மையிலும் உண்மை.

No comments :

Post a Comment