Tuesday 21 April 2015

தயவுசெய்து படியுங்கள்


                                                                                தயவுசெய்து படியுங்கள்
கல்லூரிகளில் முதுநிலை பொறியியல் [M.E], முதுநிலை கணிணி பயன்பாட்டியல்[M.C.A], மற்றும் முதுகலை மேலாண்மை [M.B.A] படிப்புகளில் சேருவதற்கான TANCET தேர்வு வரும் மே மாதம் நடைபெற உள்ளது . முதுநிலை படிப்புகளில் சேர ஆர்வமுள்ளவர்கள், தயவுசெய்து விண்ணப்பிக்கவும். முக்கியமாக, முதுநிலைப் படிப்பு படிக்க விரும்பும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்து, தவறாமல் தேர்வினை எழுதுங்கள்.
     தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த நிறைய , நல்ல அறிவுள்ள, சிந்திக்கத் தெரிந்த மாணவர்கள் பலரும், முதுநிலை படிப்புப் படிக்க ஆர்வமிருந்தாலும், பணமில்லை என்ற ஒரே காரணத்திற்காக, முதுநிலைப் படிப்புகளில் சேர்வதில்லை.
     ஆனால், மத்திய, மாநில அரசுகள் தாழ்த்தப்பட்டவர்கள் முதுநிலைப் படிப்புப் படிக்க, ஏராளமான சலுகைகளை வழங்குகின்றன.
எனக்குத் தெரிந்து, முதுநிலைப் பொறியியல் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்லூரிக் கட்டணம் முழுமையும் அரசே செலுத்திவிடும். எனவே, பரிட்சை மற்றும் புத்தகச் செலவுகளைத் தவிர்த்து ஒரு பைசாக் கூட செலவில்லாமல், முதுநிலைப் பொறியியல் படிக்கலாம். இது 100 சதவிகிதம் எனக்கு உறுதியாகத் தெரியும். ஆனால், எனக்கு மற்ற படிப்புகளில் உள்ள சலுகைகள் பற்றித் தெரியவில்லை.
 இந்த சலுகையை TANCET தேர்வெழுதி, கலந்தாய்வு [counseling] மூலம் கல்லூரியில் சேரும் மாணவர்களே முழுமையாகப் பெற முடியும். கலந்தாய்வு இல்லாமல் கல்லூரிகளில் நேரடியாக் சேருபவர்கள், அந்தக் கல்லூரிகள் நிர்ணயிக்கும் கட்டணத்தைப் பொறுத்து, 25% முதல் 75%  வரை மட்டுமே அரசிடமிருந்துப் பெற முடியும்.
நிறைய மாணவர்களுக்கு இதுபோன்று தங்களுக்கு நியாயமாகக் கிடைக்கக் கூடிய சலுகைகள் பற்றித் துளியும் தெரியவில்லை. தெரியப்படுத்த வேண்டியவர்களும், தெரியப்படுத்துவதில்லை. இதில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோர் என வித்தியாசமே இல்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், முதுநிலைப் படிப்பு படிக்க ஆர்வமில்லை என்றாலும் கூட இதுபோன்ற போட்டித் தேர்வுகளை தாராளமாக எழுதலாம், இதனால் நன்மையே தவிர, துளியும் தீமையில்லை.
எனவே, இளநிலைப் படிப்பை முடிக்கப் போகும் மாணவர்கள், முதல் வேலையாக, TANCET விண்ணப்பித்து,தேர்வினை எழுதுங்கள். பின், , தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, முதல்தலைமுறைப் பட்டாதாரிகள், மற்றும் மாணவிகளுக்கென்று அரசங்கத்தால் வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன, தகுதிகள் என்ன, எவ்வளவு உதவிக் கிடைக்கும் எனத் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்.
 இப்பொழுதே நீங்கள் படிக்க விரும்பும் கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு,பின், அந்தக் கல்லூரியில் அராசாங்கத்தின் சலுகைகள் சரிவரக் கிடைக்கிறதா என்று விசாரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இதுபோன்ற நிறையப் போட்டித் தேர்வுகள் , பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும், எனவே மாணவர்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள, துறைகளில் உள்ள போட்டித் தேர்வுகளைக் கண்டறிந்து விண்ணப்பியுங்கள்.
இதைப்போன்றே, இளங்கலைப் படிக்கப்போகும் மாணவர்களுக்கும் நிறையத் தேர்வுகள் நடைபெறும்.
உங்களுக்கு நன்மைத் தரும் அணைத்தையும் தேடித் தேடி அறிந்துக் கொள்ளுங்கள்.
கல்வி சம்பந்தப்பட்ட செய்திகளை அறிந்துக் கொள்ள்த் தனிப்பட்ட முறையில்புதியத் தலைமுறைக்கல்விஇதழையும், “எப்ளாய்மெண்ட் சர்வீஸ்வார நாளிதழையும் பரிந்துரைக்கிறேன்.


பின்குறிப்பு: இந்தப் பதிவை +2 முடிக்கும் மாணவர்களோ அல்லது இளநிலை கல்லூரிப்  படிப்பை முடிக்கும் மாணவர்களோ படிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை, எனவே இப்பதிவைப் படிப்பவர்களில் யாரேனும், தயவுசெய்து, தங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு எடுத்துக் கூறி வழிநடத்துமாறுக் கேட்டுக்கொள்கிறேன்.

No comments :

Post a Comment