Tuesday 13 January 2015

சென்னை புத்தககாட்சி 2015

     இந்த ஆண்டுதான் சென்னை புத்தக காட்சிக்கு, முதல் தடவை .சென்றேன்.அ.முத்துலிங்கம் எழுதிய “கடவுள் தொடங்கிய இடம்” புத்தகத்தினை வாங்கதான் முக்கியமாக சென்றேன். காரிலும்,பைக்கிலும் உள்ளே நுழைபவர்களையும்,வெளியே செல்பவர்களையும்,குடும்பத்தோடு குதுகலமாய் வந்தவர்களையும்,சுண்டல்,சமோசாக்களையும்,YMCA வில் பள்ளிப் பிள்ளைகள் விளையாடுவதையும்,தேநீர்,குளம்பி குடிப்பவர்கள்,தட்டு அளவிலான அப்பளம் தின்பவர்கள்,நவநாகரிக மங்கைகளை(அல்லது அப்படி நினைத்துக் கொள்பவர்களை) எல்லாம்,வேடிக்கைப் பார்த்தபடி,அரங்கினுள் நுழைந்து, நேராக விகடன் பதிப்பக அரங்கிற்கு சென்று,”கடவுள் தொடங்கிய இடத்தை” தேடினேன்,கிடைக்கவேயில்லை.கடவுள்னாலே இப்படிதான்,தேடினா கிடைக்காது.இன்னும்,புத்தகக் காட்சி அரங்கிற்கு வரவில்லையாம்.

     பின் நேராக,கண்ணதாசன் பதிப்பக அரங்கு.நுழைந்தவுடனே கிடைத்துவிட்டது “எனக்கும் ஒரு கனவு” என்ற அமுல் நிறுவனத்தை நிறுவிய வர்கீஸ் குரியனின் புத்தகம்.அதையும் தேடித்தான் வந்திருந்தேன்,150 ரூபாய். அருமையான புத்தகம்.நிறைய சுவாரசியமான வேறு யாராவது இந்த புத்தகத்தை வாங்குகிறார்களா என்று, பார்த்துக் கொண்டு நின்றேன்,எல்லோரும் குண்டு,குண்டாக “அர்த்தமுள்ள இந்துமதம்” வாங்கி சென்றார்கள். கடவுள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டதற்கு இதுவே சாட்சி.கடவுளை பரிசோதிக்கிறார்கள்.

    பின் கால் வலிக்க சுற்றினேன்,”பொன்னியின் செல்வன்”,”ராசி பலன்கள்”,புத்தகங்கள் தான் அதிகம் விற்றிருக்கும் என நினைக்கிறேன். அம்பேத்கர்,கம்யூனிசம் எனவும் வாங்கினார்கள்,எனக்கு நம்பிக்கை இருக்கிறது,நிச்சயமாக படிக்க மாட்டார்கள்.

   அம்பேத்கரைப் பற்றி ஒரு புத்தகம்.ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் எழுதியது,பெயர் சரியாக நினைவில்லை,அதாவது இப்படி இருக்கும்“வரலாற்றுப் பார்வையில் அடிகள்,ஆசான்,அண்ணல்”.அற்புதமான புத்தகம்,காந்தியையும்,அம்பேத்கரையும் திருக்குறளின் வழியாக பார்ப்பது.நிறைய வரலாற்றுத் தகவல்கள்,அழகான திருக்குறள்கள்,என சுவாரஸ்யமாக இருக்கும்.அதைப் பற்றி பிற தகவல்கள் என்னிடம் இல்லை,உங்கள் கண்ணில் தட்டுப்பட்டால் தவறாமல் வாங்கி படியுங்கள்.

       பின் நண்பனுக்காகவும் சில புத்தகங்களை வாங்கிக்கொண்டு,வெளியேறுகையில் ஒருவர்,உள்ளே வருவோரிடமெல்லாம்,திரையரங்குகளில் டிக்கெட் வாங்கிகொண்டு உள்ளே விடுவார்களே,அதேபோல் டிக்கெட்டை வாங்கி கிழித்து,கொடுத்துக்கொண்டிருந்தார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை,பின் ஒருவரிடம் விசாரித்தேன்,அது நுழைவு சீட்டாம்!நான் வாங்கவில்லை.

 மறந்துவிட்டேன்.  அன்று காலை தான் சென்னை வந்தேன்,ஒரு காபி குடித்துவிட்டு,முழுவதும் விடியாத அந்த காலையில்,எழும்பூர் ரயில் நிலையம் எதிரே ஒரு தெருவோரக் கடையில், ஒரு புத்தகம் வாங்கினேன், “டிங்கில் ஸ்டார்”.

      
       

No comments :

Post a Comment