Thursday 9 April 2015

அஞ்சலி-ஜெயக்காந்தன்



     ” பதேர் பாஞ்சாலி” என்னை மிகவும் பாதித்த ஒரு நாவல்.  அதே அளவு பாதிப்பை நான் தங்கர்பச்சானின் “ஒன்பது ரூபாய் நோட்டு” நாவலில் மீண்டும் உணர்ந்தேன். இந்த இரு நாவல்களையும் முடித்தப்பின் அவற்றைக் கீழே வைக்கவே மணம் வரவில்லை எனக்கு. வெகுநாட்கள் அந்த நாவல்களின் கதாப்பாத்திரங்கள், சம்பவங்கள் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருந்தன. ஆனால், இந்த இரு நாவல்கள் தந்த அதே அளவு பாதிப்பை ஒரு சிறுகதை எனக்குத் தந்தது. அந்தக் கதையைப் படித்து இரண்டு வருடம் ஆனாலும், வாரம் ஒருமுறையாவது அந்த சிறுகதை என் நினைவுக்கு வந்து விடும், குறிப்பாக சில வீடுகளின் ஜன்னல்களைப் பார்க்கும் போது.

   “நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்” என்றக் கதைதான் அது. எழுதியது ஜெயக்காந்தன் தான். அதை முதல் முறை படிக்கும் போது என்னால் நம்பவே முடியவில்லை. என்ன ஒரு வித்தியாசமான முயற்சி அது.

    அந்தக் கதையில் உள்ள நுணுக்கங்கள், நான் சிறுகதை எழுதூம் ஆசையை ஆழக்குழித்தோண்டி புதைத்துவிட்டன, எனலாம். முக்கியமாக ஒரு திருமண ஊர்வலம் வரும்போது, அந்தப்பெண் வெட்கப்படுவதையும், யானை ஜென்னல் கம்பி வழியே புகுந்து வீட்டினுள் வருவதையும் சொல்லும் இடங்களில், நானே அந்தப் பெண்ணாக மாறிவிட்டிருந்தேன்.

   ”பனியும் நெருப்பும்” என்ற மொழிப்பெயர்க்கப்பட்ட லத்தின் அமெரிக்க சிறுகதைத் தொகுப்பு ஒன்று. அதில் சேகுவேராவைப் பற்றியக் கதையெல்லாம் வரும். அந்தத் தொகுப்பில், ஒரு கதையில் நாயகனின் வாழ்க்கை பின்னோக்கி செல்வது போல் காட்சியமைப்பு இருக்கும், அதாவது நீரூற்றுகளில் தண்ணீர் வெளியே ஊற்றாமல், உள்ளே செல்லும், முழுமையடைந்தக் கட்டிடங்கள், கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்ப நிலைக்கு செல்லும் என்பது மாதிரி. ஜெயக்காந்தனின் “நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்” அதேபோல் காட்சியமைப்புகள் கொண்டதுதான்.

   அந்தக் கதையை விட நான் வியந்தது, ஜெயக்காந்தன் ஒரு பெண்ணின் மனநிலையை எப்படி இவ்வளவுத் துல்லியமாக படம்பிடித்தார் என்பதுதான்.
பெண்ணியம் பேசும், பெண் விடுதலைப் பேசும், தங்களை கம்யூனிஸ்ட் என் அடையாளப்படுத்திக் கொள்ளும் எந்த பெண் எழுத்தாளர்களெல்லாம், இதுபோல் ஒரு படைப்பையும் படைத்ததாகத் தெரியவில்லை. இப்போதெல்லாம் சிறுகதையோ அல்லது ஒரு கவிதையோ, கெட்டவார்த்தைகள் அல்லது இனப்பெருக்க உறுப்புகளையோ  அல்லது ஏதேனும் ஒரு சாதியின் பெயரையோ சொன்னால் அது சிறந்தப் படைப்பாகி விடுகிறது. இனிமேலும், நமது தமிழ் இளம் எழுத்தாளர்கள் ஜெயகாந்தன் போல் படைப்புகளைத் தருவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

  இந்தக் கதையில் ஜெயக்காந்தன், பெண்ணின் உணர்ச்சிகளைக் காட்டவில்லை, உள்ளத்தைக் காட்டியிருக்கிறார், பெண் உடலைக் காட்டவில்லை, பெண்ணைக் காட்டியிருக்கிறார்.

   ஆனாலும், எனக்கு தமிழைத் தவிர வேற்று மொழி இலக்கியங்களில் பரிச்சயம் இல்லாத்தால், இந்தக் கதையை விட சிறந்தக் கதைகள் தானா நோபல் பரிசெல்லாம் வாங்குகின்றன, என்ற ஐயமும் தோன்றுகிறது.

No comments :

Post a Comment