Sunday 19 April 2015

தந்தியும், தமிழ் ஹிந்துவும்


எனது அறிவைப் பற்றி எனக்கு எப்பொழுதுமே ஒரு ஐயம் இருந்து வருகிறது. அது என்னவென்றால், உண்மையிலேயே எனக்கு அறிவு இருக்கிறதா, அல்லது இல்லாததை இருப்பதுபோல் கற்பனை செய்துக் கொள்கிறேனா? என்பதுதான் அது.

 அதுவும் தமிழ் ஹிந்துவில்,

”தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!” 

எனறத் தொடரைப் படித்தவுடன் ஐயம் இன்னும் அதிகமாகி விட்டது.

தமிழ் ஹிந்துவில் அந்த நேர்காணலை பற்றின தொடர்களைப் படித்தப் பின் தான் அந்த நேர்காணலைப் பார்த்தேன். நொந்துவிட்டேன்.

அந்த நேர்காணல் பற்றி பகுத்தறிந்துப் பார்த்ததில், எனது சிற்றறிவுக்கு எட்டியவை,


“ மிக மிக சாதாரணமான உரையாடல்”.

பாண்டேவின் கேள்விகள் எதுவுமே புதிதல்ல
 திராவிட கழகத்தினை அவமானப்படுத்தும் நோக்கில் கேட்கப்படவில்லை.

நிச்சயமாக, வீரமணி அவர்கள் பதிலளிக்க திணறவில்லை


  
பாண்டேவின் இந்தக் கேள்வியைப் பாருங்கள்,

இந்துக்களையும், பிராமணர்களையும் நீங்கள்(தி.க) குழப்பிக்கொள்ளுகிறீர்களா?

இந்தக் கேள்வி என்னை மிகவும் குழப்பிவிட்டது. இந்து மதத்தில் தானே பிராமணர்கள் இருக்கிறார்கள், அப்புறம் எப்படி இரணடையும் குழப்பிக்கொள்ள முடியும்,

ஒருவேளை, பாண்டேவின் கருத்துப்படி, பிராமணர்கள் இந்துக்கள் இல்லையோ?

அதன் பின் ஒரு கேள்விக்கு, அணைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், என்ற சட்டத்தை தி.க  முயற்சி செய்து கொண்டு வந்ததாக என வீரமணிக் கூற,  பாண்டே உடனே ஒரு எதிர்க் கேள்விக் கேட்கிறார் பாருங்கள் , “அணைத்து சாதியினருக்கும் என்று தானே சொல்கிறீர்கள், தாழ்த்தப்பட்டவருக்கு என்ன செய்தீர்கள்?”

கோவிலுக்குள்ளேயே நுழையக் கூடாது எனத் தடுக்கப்பட்ட மக்கள், கருவறைக்குளேயே சென்று வழிபாடு நடத்தலாம் எனற சட்டம், எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.

ஒருவேளை, பாண்டேவின் கருத்துப்படி, தாழ்த்தப்பட்டவர்கள் என்பது சாதிப் பிரிவு இல்லையோ?

 அதேபோல், மனமுதிர்ச்சியற்றத் தன்மையினால் உருவான, அமெரிக்க நிறவெறியையும், கடவுளின் பெயரால், ஒருவனைத் தாழ்வாக நடத்திய இந்திய சாதி வெறியையும் பாண்டே ஒரே தட்டில் வைக்கிறார்.

அமெரிக்க கருப்பினத்தவர், கடவுள் துணையைத் தேட தடையேதுமில்லை, ஆனால் இந்தியத் தாழ்த்தப்பட்டவர்கள் உருவானதே கடவுளின் பெயரால்தானே?

 இந்த நிகழ்ச்சியில், பாண்டேவால் கேட்கப்பட்ட சரியான ஒரு கேள்வி என்னவென்றால்,” முஸ்லிம் பெண்கள் பர்தா அணியும் முறையை எதிர்த்து தி.க ஏன் போராடவில்லை?”, என்பதே.

இந்தக் கேள்வி உண்மையில் நியாயமான, நடுநிலையானக் கேள்வி.ஆனால் இதற்கு, வீரமணி சரியான பதிலை அளிக்கவில்லை. ஏனென்றால், பர்தா முறைக்கு எதிராக தி.க தீவிரமாக போராடவில்லை என்பதே உண்மை. மாறாக, ”தி.க வுக்கும், இஸ்லாமியர்க்கும் சண்டையை மூட்டி விடுகிறீர்களா?” என்று பாண்டேவைப் பார்த்துக் கேட்கிறார்.

இந்த ஒருக் கேள்வி மட்டும் தான், அந்த நிகழ்ச்சியிலேயே உருப்படியானக் கேள்வி, மிகவும் தேவையானக் கேள்வியும் கூட.

இதைத் தவிர தமிழ் ஹிந்து இணையதளம் ஒருத் தொடரையே எழுதுமளவுக்கு ஒன்றுமில்லை. தி.கவைப் பற்றியோ, பெரியாரைப் பற்றியோ, அந்த நிகழ்ச்சியில் எனக்குத் தெரிந்து, சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்லை. அல்லது என் சிற்றறிவுக்க்குத்தான் எட்டவில்லையோ என்னவோ?

தவிர, தமிழ் ஹிந்துவில் அவ்வப்போது, சில நல்லத் தொடர்களும் வருகின்றன. கம்பராமாயணத்தையும்,  வால்மீகி ராமாயணத்தையும் ஒப்பிட்டு வந்த ஒரு தொடர் என் விருப்பத்துக்குரிய ஒன்று.

No comments :

Post a Comment